ஈசாவாஸ்ய உபநிஷத்


முன்னுரை



வேதங்கள், நமது நாடு உலகத்திற்கு அளித்த அரிய பொக்கிஷங்களில் தலையாயது. அவை கடவுளைப் பற்றி தோத்திரம் செய்வது, யாகங்கள் செய்வது, நலமாக வாழும் வழிகளை விவரிப்பது, போன்ற முக்யமான விஷயங்களை நமக்கு தெறிவிக்கின்றன. உபநிஷத் என்பது வேதத்தின் கடைசியில் வரும் பகுதி. இதில் ஆத்மா என்றால் என்ன, அதை அறிவது எப்படி, இந்த உலகம் எப்படித் தோன்றியது, இது தோன்றியதற்கு காரணம் எது, என்ற பல விதமான முக்யமான விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறது.


உபநிஷத் என்றால் பொதுவாக ப்ரம்மத்தைப் பற்றிய அறிவு என்று கூறலாம். அந்த அறிவு பரம்பரை பரம்பரையாக மிகச் சிறந்த ஞானிகளாகிய ரிஷிகளால் விவாதிக்கப் பட்டு முடிவான கூற்றாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது. “எவர்கள் இதை வியாக்கியானம் செய்தார்களோ, அந்த ஞானிகளிடமிருந்து இது எங்களால் கேட்கப் பட்டது” என்று ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் சாந்தோக்ய உபநிஷத்திலும் கூறப் படுகிறது. எனவே இது காலத்தினால் உறுதி செய்யப் பட்டது. (விஞ்ஞானத்தின் தியரிகளைப் போல காலத்தால் மாறுபாடு அடைவதில்லை). முண்டக உபநிஷத்தில் பெரிய யாகசாலையை உடைய சௌனகர் அங்கிரஸர் என்ற ரிஷியை அணுகி முறைப் படி வணங்கி எதை அறிவதனால் எல்லாவற்ரையும் அறிந்தது ஆகும் என்று கேட்கிறார். அதற்கு அங்கிரஸ் முனிவர் இரண்டு விதமான அறிவு அறியத் தக்கது என்று வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஒன்று பரா வித்யா இன்னொன்று அபரா வித்யா. எதனால் அழிவற்ற பரம்பொருளான ப்ரம்மம் அறியப் படுகிறதோ அது பரா வித்யா, மற்றவை எல்லாம் அபரா வித்யா. அவரது கூற்றின் படி நாம் படிக்கும் எல்லா வகையான கல்வியுமே அபரா வித்தையில் சேரும். அவர் இன்னும் ஒரு படி மேலே போய் ப்ரம்மத்தைப் பற்றிய அறிவைத் தராத வேதமும், வேதத்தின் அங்கங்களான சிக்ஷா, ஆயுர்வேதம், இலக்கணம், நிருக்தம், ஜ்யோதிடம் முதலியவைகளுமே அபரா வித்யா என்று கூறுகிறார். ப்ரம்மனைப் பற்றிக் கூறும் பொழுது அந்த ப்ரம்மன் ஞானேந்த்ரியங்களால் பார்க்கப் படாதது, கர்மேந்த்ரியங்களால் க்ரஹிக்கப் படாதது, எப்பொழுதும் உள்ளது, அனைத்துமாக தோற்றமளிப்பது, அனைத்தயும் வ்யாபிப்பது, உலகத்தின் மூலப்பொருள் அதுவே. இப்படிபட்ட ப்ரம்மனை ஞானிகள் எங்கும் காண்கின்றனர். எவ்விதம் சிலந்தி வலையை உற்பத்தி செய்கிறதோ, தனக்குள் எடுத்தும் கொள்கிறதோ, அவ்விதம் அழியாத ப்ரம்மனிடமிருந்து இவ்வுலகம் தோன்றுகிறது என்று பலவாறு விவரிக்கப் படுகிறது.


இப்பொழுது இன்றைய விஞ்ஞான அறிவின் முதிர்ச்சியைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம். விகி பீடியா (www/Wikipedia.org) என்ற வலையில் தேடினால் அநேக விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.


முதலாவதாக இந்த ப்ரபஞ்சம் (universe) எப்பொழுது, எப்படி, எதனால், உருவாயிற்று என்று தேடினால் கிடைக்கும் விடை Big bang theory அதாவது பெரும் வெடிச் சிதறல் என்பது. அந்த தத்துவத்தின் படி இந்த ப்ரபஞ்சம் சுமாராக 1379, கோடி வருஷங்களுக்கு முன்னால் தோன்றியிருக்கும், அது தோன்றுவதற்கு முன்னால், ஒரு அளவிட முடியாத, பெரிய, அடர்ந்த, ஒரே வஸ்துவால் ஆன (homogeneous matter) பெரும் சக்தி வாய்ந்த, கருமை நிற கோளமாக இருந்தது. அது திடீரென்று வெடித்து சிதறி பல கோள்களின் கூட்டங்களாக ஆயிற்று. இவை ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிந்து சென்று கொண்டிருக்கின்றன. இபபொழுதும் கூட ப்ரபஞ்சத்தின் முக்கால் பகுதி ஒரு கருமை சக்தியால் (dark energy) நிரம்பி இருக்கிறது. ஆங்காங்கே கருமைச் சுழல்கள் (dark holes) இருக்கின்றன. அவைகள் பெரும் சக்தியை உடையவன. அவை பக்கத்தில் வரும் எல்லாவற்றையும் தம்முள் ஈர்த்து மறைந்து போகச் செய்கின்றன. இவைகள் பெருகினால் இந்த ப்ரபஞ்சமே அவைக்குள் மறைந்து விடும். அல்லது கோள்களின் கூட்டங்கள் விரிந்து கொண்டே போய் கடைசியில் தேய்வுற்று ஒன்றுமில்லாமல் போய்விடும். உறுதியாகச் சொல்வதற்கில்லை. தற்பொழுது இருக்கும் ப்ரபஞ்சத்திற்கு முன்பு இதே போல ப்ரபஞ்சம் இருந்ததா, இருந்திருக்குமா என்றால் அதற்கு பதில் உறுதியாகச் சொல்வதற்கில்லை என்பதே. ஏனென்றால் அந்த சக்தி வாய்ந்த கருமை நிற கோளம் வெடிப்பத்ற்கு முன்பு இவ்வளவு சக்தியும் ஒரு பெரிய அளவு கடந்த மேக மூட்டம் போல இருந்ததாக நம்பப் படுகிறது.


இப்பொழுது அணு விஞ்ஞானம் எது வரை முன்னேறியிருக்கிறது என்று பார்ப்போம். அணுக்கள் ந்யூட்ரான், ப்ரோட்டான், எலெக்ட்ரான் (netron, proton, electron) முதலியவைகளினால் ஆனது எந்த ஒரு வஸ்துவும் இவைகளின் வெவ்வேறு அளவிலான சேர்க்கைகள் தான் என்று கண்டு பிடிக்கப் பட்டது. அதாவது கல், மண், மரம், செடி, கொடி, மனிதன், மிருகம், ஸ்தாவர ஜங்கம வஸ்துக்கள் எல்லாமே இந்த மூன்றின் சேர்க்கை தான் என்று உறுதி செய்யப்பட்டது. (பிரகலாதன் விஷ்ணு பகவான் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொன்னது ஞாபகத்திற்கு வரும்) இப்பொழுது இந்த மூன்றின் எதிர் மறையான குணங்கள் உள்ள ஆன்டி ந்யூட்ரான், ஆன்டி ப்ரோட்டான், ஆன்டி எலெக்ட்ரான் (antinetron, antiproton, antielectron – antimatter) என்ற துகள்கள் இருக்கின்றன, அவை எல்லாம் சில சமயம் ஒளியாகவும் சில சமயம் கதிர்களாகவும் தோன்றுகின்றன. இவை தவிர இன்னும் சில துகள்களும் (க்வேஸார் quasar முதலியவைகளும்) இருக்கின்றன என்று சொல்லப் படுகிறது. இதைப் பார்க்கும் பொழுது விநாயகர் அகவலில் அவ்வை மூதாட்டி கூறும் வார்த்தைகளான “அணுவுக்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய், கணு முற்றி நின்ற கரும் புள்ளே” என்ற வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன! ஆக காலம் மாற மாற மனிதனின் அறிவு வளருகிறது அவனது கருவிகளின் திறமை அதிகரிக்க அதிகரிக்க அவன் எங்கும் ஒருமையைக் காண்கிறான். அறிவிற்கு அப்பார்ப் பட்டது இருக்கிறது என்பதை பல தலை சிறந்த விஞ்ஞானிகள் இன்று ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் நமது ரிஷிகளோ பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உபநிஷதங்களில் இதையே கூறினார்கள்.


ப்ரம்மத்தைப் பற்றிய அறிவைத் தரக்கூடிய வேதத்தின் பகுதியையும் உபநிஷத் என்றே கூறுவது வழக்கம். அதில் வரும் ரிஷிகளுக்கோ, மற்ற பாத்திரங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. உயர்ந்த கருத்துக்களே விளக்கமாகப் பேசப்படுகின்றன. சிறு கதைகளை எடுத்துக் காட்டாகக் கொண்டு மிகப் பெரிய அறிய தத்துவங்கள் எடுத்துறைக்கபடுகின்றன. உதாரணமாக ப்ருகதாரண்ய உபநிஷத்தில் அருண ரிஷியின் பேரனாகிய ஸ்வேதகேது என்ற மாணவன் பாஞ்சால நாட்டின் மன்னாகிய ப்ரவாஹனன் என்ற ராஜாவின் ஸபைக்குச் செல்கிறான். அங்கு அந்த ராஜா அவன் எப்படிப் பட்ட மேதை என்று அறிந்து கொள்வதற்காக சில கேள்விகள் கேட்கிறார். இப்படி ஆரம்பிக்கும் கதை தொடர்ந்து மனிதன் இறந்த பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தெளிவு படுத்துகிறது. ஆனால் அந்த ராஜாவைப் பற்றியோ அல்லது அந்த மாணவனைப் பற்றியோ வேறு விவரங்கள் கூறப்படுவதில்லை.


இதே மாதிரி சாந்தோக்ய உபநிஷத்தில் ஸத்யகாம ஜாபாலன் என்னும் சிறுவன் தன் தாயிடம் அம்மா நான் குருகுலம் சென்று கற்க விரும்புகிறேன், நாம் எந்த கோத்திரம் என்று கேட்க அதற்கு அவனது தாயார் அதை நான் தெரிந்து கொள்ளவில்லை உன் பெயர் ஸத்ய காமன் என் பெயர் ஜாபாலை எனவே நீ ஸத்ய காமன் என்ற ஜாபாலன் என்றே சொல்லிக்கொள்ளலாம் என்கிறாள். அவன் ஹாரித்ருமர் என்ற ரிஷியிடம் சென்று தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறான். அந்த ரிஷி அவனது கோத்திரத்தைக் கேட்கிறார். அவன் தன் தாயார் கூறியவற்றை மறைக்காது உள்ளது உள்ளபடியே ரிஷியிடம் கூற அவர் அவனது உணமை கூறும் தன்மையைப் புகழ்ந்து அவனை மாணாக்கனாக ஏற்றுக்கொண்டு அவனுக்குப் பாடம் புகட்ட அவன் பிற்காலத்தில் சிறந்த ரிஷியாகப் பரிணமிக்கிறான். இங்கு ஏன் அவன் அம்மாவிற்கே அவனது பிறப்பைப் பற்றிய விவரம் தெரியவில்லை என்பது போன்ற உலக வழக்கமான விஷயங்கள் பேசப்படுவதில்லை. இந்தக் கூற்று உண்மை பேசுவதின் பெருமையை எடுத்து இயம்புகிறது.


உபநிஷத்துக்கள் பல விவாதங்கள் மூலமாக அரிய பெரிய விஷயங்களைத் தெரிவிக்கின்றன. ஆனால் இன்றைய பட்டி மன்றங்களைப் போல ஒரு ஒழுங்கு முறையற்ற, வாய்க்கு வந்த படி முடிவில்லாத பேச்சுக்கள் எங்கும் கிடையாது. பேசப்படும் விஷயம் வேதத்தின் ஆதாரத்துடனும் தர்க்க விதிகளின் முறைப்படியும் இருக்கவேண்டும். தன்னை விட மற்றவர் பேசிய கருத்துக்களை மறுத்துச் சொல்லமுடியாவிட்டால் அதை ஒத்துக் கொள்ளும் பெருந்தன்மையையும் காணமுடியும். உபநிஷத்துகளிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படும் விவாதம் ஜனக மகாராஜாவின் சபையில் நடந்த விவாதம் ஆகும். அவர் அங்கு சபையில் கூடியிருந்த ரிஷிகளிலேயே மிகச் சிறந்த ப்ரம்ம நிஷ்டர் (ப்ரம்மத்தை உணர்ந்தவர்) யார் என்ற கேள்வியை எழுப்பி, அப்படிப்பட்டவரே அங்கு கொண்டுவரப்பட்டிருந்த நூறு பசு மாடுகளையும் அவற்றின் கொம்பில் கட்டியுள்ள பொன் மூட்டைகளையும் எடுத்துச் செல்லலாம் என்று மன்னன் அறைகூவல் விடுகிறார். அப்பொழுது எல்லோரிலும் சிறந்தவரான யாக்ஞவல்கிய மஹரிஷி அந்த பசுக்களைத் தனது ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லும்படி தனது மாணாக்கனை உத்தரவிடுகிறார். உடனே பல ரிஷிகள் எழுந்து கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார்கள். அஸ்வலா, உத்தாலகா என்று பல அறிஞர்கள் கேள்விகள் கேட்க யாக்ஞவல்கியரின் பதிலில் சமாதானமடைந்து அவர்கள் தத்தம் இருக்கைகளில் அமர்கின்றனர். கார்கி என்ற ரிஷி அம்மையார் இரண்டு தடவை கேள்விகள் கேட்டு யாக்ஞவல்கியரின் பதில்களின் உண்மையை ஒத்துக்கொண்டு மற்ற ரிஷிகளிடம் இவரே சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை இவரை உங்களால் வாதத்தில் வெல்லமுடியாது என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறார். அப்படியிருந்தும் சாகல்யர் என்பவர் எழுந்து ப்ரம்மத்தைப் பற்றித் தனக்குத் தெரிந்த அரைகுறை அறிவைக்கொண்டு வாதாடுகிறார். அவருடைய அறிவின் எல்லையைக் கண்ட யாக்ஞவல்கியர் அவரை மற்றவர்கள் ஒரு ஸாதனமாக உபயோகிக்கிறார்கள் என்று அவருக்கு தெரியப் படுத்துகிறார். ஆனாலும் அந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து மேலும் கேள்விகள் கேட்க, அவருடைய கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லிக் கடைசியில் “நான் ஒரு கேள்வி கேட்கிறேன், இதற்கு நீ பதில் சொல்ல முடியாவிட்டால் உன் தலை வெடிக்கக் கடவது என்று சாபமிடுகிறார்”. அதே போல சாகல்யரால் பதில் சொல்லமுடியாததால் அவர் தலை வெடிக்கிறது. கார்கி அம்மையாருக்கோ யாக்ஞவல்கியருடைய அறிவின் பெருமை தெறிந்திருந்தது, மற்றவரின் அறிவை மதிக்கும் பெருந்தன்மையும் இருந்தது, ஆனால் சாகல்யருக்கு அதற்கு பதிலாக அகம்பாவமே நிரம்பி இருந்தது எனவே அவரது முடிவு பரிதாபமாக முடிந்தது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் வாதிடுவதில் ஒரு ஒழுங்கு, ஒரு நியாயம் என்பது இருக்கவேண்டும், மிகச் சிறந்த அறிஞர்களுடன் வாதிடுவதற்கு ஒரு ததுதி வேண்டும், வாதிடும்பொழுது பணிவும் வேண்டும் என்பதே. ப்ரம்ம ஞானம் பற்றியும் அதை அடைவது எப்படி என்றும் விளக்கும் உபநிஷதங்கள் ஒரு சிறுபான்மையரத் தவிர மற்ற எல்லோரும் அந்த நிலையை அடைவது கடினம் என்று ஒத்துக் கொண்டு ஒரு சராசரி மனிதன் எவ்வாறு வாழ்ந்து படிப்படியாக முன்னேறுவது என்பதையும் கூறுகின்றன. க்ருஹஸ்தாசிரமத்தை சமூகத்தின் தூணாகக் கருதி க்ருஹஸ்தாசிரமத்தில் இருக்கும் ஒரு சம்சாரி பஞ்ச மஹா யக்ஞத்தை அனுஷ்டிப்பதனால் எப்படி சமூகத்தின் அஸ்திவாரமாக செயல்பட முடியும் என்று எடுத்துக் காட்டுகின்றன. பஞ்ச மஹா யக்ஞமாவது தெய்வங்களுக்காக யாகங்கள், பூஜைகள் செய்வது, முன்னோர்களுக்கான ஸ்ரார்த்தம் முதலிய செய்வது, அதிதி உபசாரம் அன்ன தானம், வஸ்திர தானம் முதலிய செய்வது, பசுக்களுக்காக (பிராணிகளுக்காக) அவைகளை பராமரிப்புக்கான ஏற்பாடுகளை செய்வது ஆகும்.


உபநிஷத் வறட்டு வேதாந்தம் அல்ல, சிறந்த வாழ்க்கையின் வழி காட்டி என்பது எப்படி என்று பார்ப்போம். தைத்திரீய உபநிஷத் ஒரு மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் அவர்களிடையில் எவ்வளவு அந்யோன்யம் வேண்டும் இருவரும் ஒருவருக்கொருவர் எப்படி விருப்பத்துடனும் அன்புடனும் பழக வேண்டும், கல்வியின் நோக்கம் என்ன, உண்மை பேசுவதின் அவசியம் என்ன, எப்பொழுது மௌனம் காக்கவேண்டும், செல்வத்தின் அவசியம் என்ன, தானத்தின் பெருமை என்ன, விருந்தோம்பலின் பெருமை என்ன என்று நல்லதொரு வாழ்வு வாழ வழியை முறைப் படுத்திக் காட்டுகிறது. மேலும் எல்லா விதமான நலன்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய உபாசனகளைப் பற்றிக் கூறி அப்படி கிடைக்கும் தனத்தை எப்படிப் பட்ட நல்வழிகளில் ஈடு படுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஈசாவாஸ்ய உபநிஷத் நற்காரியங்களைச் செய்து கொண்டு நூறு வருஷங்கள் வாழ விரும்ப வேண்டும் என்று அறிவுருத்துகிறது. ப்ருஹதாரண்ய உபநிஷத் சத் புத்திரர்களைப் பெறுவதால் அவர்கள் தகப்பனாரால் ஆரம்பிக்கப் பட்டு செய்ய முடியாமல் போன நல்ல காரியங்களைச் செய்பவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது.


வேத காலத்தில் கல்வி கற்பிக்கும் முறை எப்படி இருந்தது, எந்த நோக்கத்தோடு கல்வி கொடுக்கப்பட்டது அதன் பலன் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள உபநிஷத்துக்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. கல்வி கற்க விரும்பும் மாணாக்கன் கையில் சமித்தை எடுத்துச்சென்று ஆசிரியரை அணுகி பணிவுடன் தன்னை மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள வேண்டிக் கொள்ள வேண்டும். ஆசிரியர் விரும்பி ஏற்றுக் கொண்டால் மாணாக்கனின் தரம் அறிந்து அவனுக்கு எந்த வழி உகந்ததோ அதற்குத்தக்கபடி கல்வி புகட்டுவார். கல்வியின் காலம் இவ்வளவு வருடங்கள் தான் என்று முன்கூட்டியே முடிவு எடுக்கப் படமாட்டாது. சிஷ்யனின் கற்கும் திறமைக்கு ஏற்றவாறு அது போகப்போக இறுதி செய்யப்படும். எல்லா மாணாக்கர்களுக்கும் ஒரே மாதிரியான பாடமும் இருக்காது. ஒரு மாணவனுக்கு முழுப் பாடமும் ஆகாவிட்டால் தக்ஷிணை பெற்றுக் கொள்வதில்லை என்பதை ப்ருகதாரண்ய உபநிஷத்தில் ஜனக மகாராஜாவுக்கு ப்ரம்மனைப் பற்றி உபதேசம் செய்யும் பொழுது, அவர் பல தடவை யாக்ஞவல்கியருக்கு நூறு மாடுகள் தருகிறேன் என்று சொல்ல யாக்ஞவல்கியர் “முழுப் பாடமும் முடிக்காமல் தக்ஷிணை வாங்கக் கூடாது என்று எனது தகப்பனார் கூறியிருக்கிறார்” என்று தக்ஷிணை வாங்க மறுக்கிறார். ஒரு ம் மேலே கூறிய ஸத்யகாமனுக்கு அவனது குரு ஹாரித்ருமர் அவனிடம் நானூறு மெலிந்த பசுக்களைக் கொடுத்து இவை ஆயிரம் பசுக்கள் ஆனதும் திரும்பி வா என்கிறார். அவனும் மறு பேச்சுப் பேசாமல் குருவின் ஆணைப்படியே பசுக்கள் ஆயிரம் ஆனதும் தான் திரும்பி வருவதாக சபதம் செய்து அவை ஆயிரம் ஆனதும் திரும்புகிறான். குருவோ அவனைப் பார்த்து உன் முகம் பிரகாசமாக ப்ரம்மத்தை அறிந்தவன் போல் காணப்படுகிறது, உனக்கு யார் உபதேசம் செய்தார் என்று கேட்கிறார். அதற்கு அவன் மனிதரல்லாத தேவதைகள் உபதேசம் செய்தன என்று சொல்லி ஆனாலும் உங்கள் வாயிலாகவே ஆசை தீர உபதேசித்தருளல் வேண்டும் என்று விண்ணப்பிக்கிறான். அவரும் அவ்வாறே உபதேசம் செய்கிறார். ஆகவே எந்த ஒரு காரியத்தையும் முழு மனதோடும் சிரத்தையுடனும் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் இயற்கையாகவே நாம் நிறைய கற்றுக்கொள்ளமுடியும், எப்படியானாலும் குரு முகமாக கற்றுக்கொள்வதற்கு ஈடு இணை கிடையாது என்றும் புரிந்து கொள்கிறோம். உபநிஷத்துக்களின் மிகத் தலையான நோக்கம் மனிதனாகப் பிறந்தவன் எவ்வாறு இந்தப் பிறவிக்கடலைத் தாண்டி ப்ரம்மத்தை அடைவது என்பதே ஆகும். ஆயினும் உபநிஷத் எல்லோராலும் அதை அடையமுடியாது என்று தீர்மானித்து பலதரப்பட்ட மனிதர்கள் அவரவர் தகுதிக்கும் முயற்சிக்கும் ஏற்ப எப்படி முயலுவது அவசியம் என்பதையும் எடுத்துச் சொல்லுகிறது. அதற்கான வழி முறைகளான நியமங்களோடு கூடிய வாழ்க்கை, த்யானம் செய்யும் முறைகள் முதலியவற்றை பல ரிஷிகளின் வாயிலாக விவரிக்கின்றன. இவற்றைப் பின்பற்றுபவர்கள் மேலான சீரிய வாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. எனவே உபநிஷத் என்பது வறட்டு வேதாந்தம் அல்ல, சிறந்த வாழ்க்கைக்கு ஒரு வழி காட்டி என்று உணருவது அவசியம்.


சங்கர பகவத் பாதர் முக்யமாகக் கருதி உரை எழுதிய உபநிஷங்களில் மிகச் சிறியது ஈசாவாஸ்ய உபநிஷத் ஆகும். கடுகு சிறிதானாலும் காரம் பெரியது என்பது போல பதினெட்டு மந்திரங்களையே கொண்ட இந்த உபநிஷத் ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டது. இதை ப்ருகதாரண்ய உபநிஷத்த்தின் சாரம் அல்லது ப்ருகதாரண்ய உபநிஷத்தை இதன் விரிவுரை என்று சொல்லலாம். மேலும் இந்த உபநிஷத் மிகவும் கடினமாக கருதப்படுகிறது ஏனென்றால் இது பல விதமான வேறுபட்ட ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ள விளக்கங்களுக்கு இடம் கொடுக்கிறது. ஈங்கு சங்கர பாஷ்யத்தைச் சார்ந்தே விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த இரண்டுமே (ஈசாவாஸ்யமும் ப்ருகதாரண்யமும்) சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்தன. (அதென்ன சுக்ல யஜுர்வேதம் என்று கேட்கக் கூடும். சாதாரணமாக யஜுர் வேதம் என்றால் க்ருஷ்ண யஜுர் வேதத்தையே குறிப்பிடுவார்கள். இதிலிருந்து வேறுபட்ட யஜுர் வேதத்தை யாக்ஞவல்கிய மகரிஷியானவர் சூரியனிடமிருந்து கிரஹித்துக் கொண்டு வந்தார் அதுவே சுக்ல யஜுர் வேதம் எனப்படுவதாகும்). ஈசாவாஸ்ய உபநிஷத் இந்த வேதத்தின் சம்ஹிதை (மந்திரங்கள்) பாகத்திலும் ப்ருகதாரண்யம் அதன் ஆரண்யக (ப்ராம்மண) பாகத்திலும் வருகிறது. சம்ஹிதை என்பது யாகங்களில் ஓதப்படும் மந்திரங்களை உடையது. ப்ராம்மணம் என்பது தத்துவ விசாரத்தைப் பற்றியது. வேதத்தை மறை என்பார்கள் ஏனென்றால் அதில் கருத்துக்கள் மிகவும் ஆழமாக மறைந்து பொதிந்து கிடக்கின்றன. அதில் வரும் சொற்கள் எந்த இடத்தில் எந்தக் கருத்தை தெளிவு படுத்த உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது என்பது முறையாகக் கற்று அறிந்தவர்களுக்கே தெரியும். ஒரு அகராதியை வைத்துக் கொண்டு படிக்க முயன்றோமானால் அதை விட தப்பான காரியம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஒரே சொல் அடுத்து அடுத்து வந்தாலும் கூட வெவ்வேறு அர்த்தத்தில் கையாளப் பட்டிருக்கும். அந்த பொருள்களை அகராதியில் காண முடியாது. சில தத்துவங்கள் பல ரிஷிகளால் வெவ்வேறு விதமாக விளக்கப் பட்டிருக்கின்றன. பின் இதை எப்படித்தான் தெரிந்து கொள்வது? நன்கு கற்றறிந்த அறிஞர்களிடம் சென்று பாடம் படிப்பதுதான் சிறந்த வழியாகும்.


நெடுங்காலமாக உபநிஷதங்கள் பரம்பரை பரம்பரையாக வாய் மூலமாக உபதேசிக்கப்பட்டு வந்தன. ரிஷிகள் அவர்களது மகன்களுக்கும் சிஷ்யர்களுக்கும் குருகுலத்தில் பாடம் சொல்லி வந்தனர். பிற்காலத்தில் பல பண்டிதர்களும் சந்யாசிகளும் பாஷ்யம் எனப்படும் விரிவுரைகளை எழுதினார்கள். பிறகு அந்த விரிவுரைகளுக்கு விளக்க உரைகளும் எழுதப்பட்டன. சமீப காலத்தில் பல அறிஞர்கள் உரைகளைத் தன்னகத்தே கொண்ட பலப் பல புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். பாஷ்யங்களிலேயே மிகவும் சிறந்ததாகவும் அத்வைதத்துக் பொருத்தமானதாகவும் அறிஞர்களால் கருதப்படுவது ஆதி சங்கரர் என்று அன்புடன் அழைக்கபடும் சங்கர பகவத் பாதரின் பாஷ்யங்களே. இவற்றைக்கூட வேத விசாரம் தொடங்குபவர்கள் படித்துத் தெரிந்து கொள்வது கடினம். எனவே இத்தகைய அரும் பெரும் அறிவு மற்றவர்களுக்கும் சேர வேண்டும் என்ற பரந்த நோக்கோடு பல அறிஞர்கள் இன்றும் பாடம் சொல்லி வருகிறார்கள். பல சொற்பொழிவுகளும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் பல மகான்கள் இந்த மாதிரி சத் காரியங்களைப் பற்றிய சொற்பொழிவுகளுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருகின்றார்கள். இத்தகைய சொற்பொழிவுகளுக்கு போகமுடியாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு சிறு அளவிலாவது ஈசாவஸ்ய உபநிஷத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்ததே இந்த நூலைத் தரும் முயற்சி. உபநிஷத் காமதேனு என்றால் பகவத் கீதா அதன் பால் என்பார்கள். அப்படிப் பட்ட கீதையிலிருந்து பல மேற்கோட்கள் இங்கு காட்டப் பட்டிருக்கின்றன. இது இந்த உபநிஷத்தின் ஒரு பரிச்சயமே. இதைப் படித்த பின் மேற்கொண்டு இன்னும் முறையாகப் படிக்க வேண்டும் என்று அவா எழுமேயானால் அதுவே அடியேன் செய்த பெறும் பேறு என்று கருதுவேன்.


இந்த பரிச்சயம் பல சொற்பொழிவுகளில் இருந்து அடியேன் தெறிந்து கொண்ட விஷயங்களின் தொகுப்பு ஆகும். இதில் ஏதேனும் பிழைகள் இருக்குமாயின் அது எனது அறியாமையின் வெளிப்பாடு ஆகும். அன்னப் பறவையைப் போல் தள்ளத்தக்கதைத் தள்ளி, கொள்ளத்தக்கதைக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வண்ணம்


ந. சுப்ரமணியன்